டெல்லி: வரும் 13-ந் தேதிவரை மக்களவைக்கு தவறாமல் வரவேண்டும் என பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, ஜனவரி 31ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட நிலையில், அதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று, நேற்று (09ந்தேதி) பிரதமர் மோடி பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதி வரும் 13ந்தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், மக்களவை பா.ஜனதா எம்.பி.க்களுக்கு அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், வரும் 13-ந்தேதி வரை, மக்களவைக்கு தவறாமல் வருமாறு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது, மக்களவையில் பட்ஜெட் மீது பொது விவாதம் நடந்து வருவதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் போதிய உறுப்பினர்கள் இல்லாததால், நேற்று முன்தினம் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது, அதுபோன்ற நிலை வரக்கூடாது என்ற நோக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.