டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என நாடாளுமன்றத்தில்  மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களால், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். ஆனால், மத்தியஅரசு அதை தடுப்பதற்கு பதிலாக, 28 சதவிகித ஜிஎஸ்டி வரி வசூலித்து வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் தடை சட்டத்துக்கும் கவர்னர் அனுமதி மறுத்து வருகிறார்.  அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி ஆன்லைன் ஆட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து பேசினார். ஆன்லைன் சூதாட்டம் மாநில எல்லைகளை கடந்த பிரச்சினை என்பதால் மத்திய அரசு சட்டம் இயற்றுவது சரியாக இருக்கும். ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.