சென்னை: சென்னையில் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலியானார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கழிவுநீர் தொட்டி, கழிவு அகற்றம் போன்றவற்றை இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்ய அரசும், நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகளை போட்டுள்ளன. ஆனால், அதை முறையாக செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. இதனால், கழிவுஅகற்றும் பணியின்போது, பலர் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை, சென்னை போரூர் அருகே உள்ள காரப்பாக்கத்தில் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த செந்தில்குமார் (வயது 47) என்பவர் விஷவாயு தாக்கியதில் அவர் பலியானார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்ணகி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் உரையில் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளின் இனி 100 சதவிகிதம் இயந்திரம் மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஒரே வாரத்தில் கழிவு தொட்டியில் ஒருவர் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது.