ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவைத் தவிர காங்கிரஸ் உள்பட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கிய நிலையில், வேட்பாளர்கள் மும்முரத்துடன் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதுவரை 4 நாட்கள் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றுள்ளது. இன்று 5வது நாளாக வேட்புமனு பெறப்படுகிறது. முதன்முதலாக தேர்தல் மன்னன் பத்மராஜன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன், அமமுக வேட்பாளர் சிவபிரசாத் உள்ளிட்ட 19 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில், 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.