டெல்லி: அதானி குழுமத்துக்கு ரூ.27 ஆயிரம் கோடி கடன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்ட வங்கியான  பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையால், அதானி குழுமம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தவர் தற்போது 15வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். இதையடுத்து, அவருக்கு வங்கிகள் வழங்கிய கடன்கள் குறித்த விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி கோரியிருந்தது. இதற்கு வங்கிகள் தரப்பு பதில் அளித்ததுள்ளன.

அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தினேஷ் கரா பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி,  அதானி குழுமத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய மொத்த கடன் ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே கடன் வழங்கி உள்ளது என தெரிவித்துள்ளார். அதாவது,  இது வங்கியின் கடன் புத்தகத்தில் வெறும் 0.88 சதவீதம் ஆகும்.

அதுபோல பங்குகளின் அடிப்படையில் அதானி குழுமத்துக்கு எந்த கடனும் வழங்கவில்லை என சுட்டிக்காட்டியிருப்பதுடன்,  கடன் வழங்குவதற்கான உறுதியான சொத்துகள் மற்றும் போதுமான பணப்புழக்கங்களை அதானி குழும திட்டங்கள் கொண்டுள்ளன. அத்துடன் கடனை திருப்பி செலுத்துவதில் சிறந்த வரலாறும் இந்த குழுமத்துக்கு உண்டு என தெரிவித்துள்ளார். மேலும்,  இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக அதானி குழுமத்திடம் இருந்து எந்தவித மறுநிதி கோரிக்கைகளும் வரவில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையே அதானி குழுமத்துக்கு தாங்கள் வழங்கிய கடன் பாதுகாப்பாக இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் வங்கி (ஜே.கே.வங்கி) தெரிவித்து உள்ளது. இது குறித்து வங்கியின் துணை பொதுமேலாளர் நிஷிகாந்த் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘அதானி குழுமத்துக்கான எங்கள் கடன்கள் ஜே.கே. வங்கியால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் சொத்துகளுக்கு மேல் பாதுகாக்கப்படுகின்றன’ என தெரிவித்தார்.

‘அதானி குழுமத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 மின் திட்டங்களுக்காக ரூ.400 கோடி கடன் வழங்கப்பட்டது. தற்போது அது சுமார் ரூ.250 கோடியாக உள்ளது. கடனுக்கான பணத்தை திருப்பி செலுத்துவது ஒழுங்காக நடைபெறுவதுடன், 2 மின் திட்டங்களும் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களுடன் செயல்படுகின்றன. அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை’ என்றும் கூறினார்.