அதானி நிறுவனம் தனது அதானி என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தில் புதிதாக பங்குகள் வெளியிடுவதாக அறிவித்த முடிவை வாபஸ் பெறப்போவதாகவும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.

அதானி நிறுவன பங்குகளை அவரது உறவினர்களும் வெளிநாட்டில் உள்ள அவரது பினாமி நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளதாகவும் பங்கு வர்த்தகத்தில் வரலாற்றிலேயே மிகப்பெரிய மோசடியில் அதானி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற நிறுவனம் கடந்த வாரம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது.
அமெரிக்க நிறுவனத்தின் இந்த அறிக்கைக்கு ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்த அனுபவசாலியான தனது நிறுவன தலைமை நிதி அலுவலரைக் கொண்டு பதிலளித்தது அதானி நிறுவனம். இதற்கு தேசியம் என்ற போர்வையில் அதானி நிறுவனம் மோசடி செய்வதாக ஹிண்டன்பர்க் பதிலடி கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து ஐந்தே நாட்களில் 7.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்து உலகின் 3 வது மிகப்பெரிய பணக்காரராக இருந்த அதானி 15வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அதானி நிறுவனம் கடந்த வாரம் புதிதாக வெளியிட்ட பங்குகளை வாங்க ஆள் இல்லாத நிலை உருவானது. இதனையடுத்து அபுதாபியைச் சேர்ந்த நிறுவனமும் அம்பானி, ஜிண்டால் (JSW), சுனில் மிட்டல் (Airtel), சுதிர் மேத்தா (Torrent), பங்கஜ் பட்டேல் (Zydus) உள்ளிட்ட இந்திய தொழிலதிபர்களின் தனிப்பட்ட குடும்ப நிறுவனங்களும் இதில் முதலீடு செய்ய முன்வந்ததாகத் தகவல் வெளியானது.

இருந்தபோதும் அதானி நிறுவன பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில் ஸ்விடஸ்ர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிரெடிட் சுவிஸ் நிதி நிறுவனம் அதானியின் பங்கு பத்திரங்கள் மதிப்பிழந்தவை என்று கூறியதோடு அதனை ஈடாக வைத்து கடன் வழங்குவது ஆபத்தானது என்று அறிக்கை வெளியிட்டது.
இதனையடுத்து அதானி நிறுவன பங்குகள் நேற்று வரலாறு காணாத சரிவால் முதலுக்கே மோசமானது இந்த நிலையில் புதிதாக வெளியிட இருந்த பங்குகளை வாபஸ் பெறப்போவதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]