சென்னை: மத்திய பாஜக அரசு இதுவரை தாக்கல் செய்துள்ள 8 நிதிநிலை அறிக்கையில் சொன்ன எதையும் செய்யவில்லை என்று திமுக குற்றம் சாட்டி உள்ளது.
மத்திய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக அரசின் நிதி நிலை அறிக்கையை கடுமையாக சாடியதுடன், கடந்த 8 ஆண்டுகள் அளித்த நிதிநிலை அறிக்கையில் சொன்னதில் எவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்கள்?. என கேள்வி எழுப்விபயதடன், ஆண்டுக்கு 3 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள் அதை செய்யவில்லை.
மேக் இன் இந்தியா என்ற ஒரு அறிவிப்பை அறிவித்தார்கள். எவ்வளவு தொழில் நிறுவனங்கள் வந்திருக்கின்றன? என்று எந்த விவரங்களும் இல்லை. நிதிநிலை அறிக்கையில் சொல்வதற்கு மாறாக மத்திய அரசின் செயல்பாடுகள் இருந்து வந்துள்ளது. உள்கட்டமைப்புக்காக செலவு செய்வோம் என்று கூறி இருக்கிறார்கள்.
பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்தார்களே தவிர சாதாரண மனிதர்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க எதுவும் செய்யவில்லை. உலக பணக்காரர்களில் 691 ஆவது இடத்திலிருந்த அதானியை இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்ததை தவிர, பொதுமக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. வளர்ச்சி ஏற்படவில்லை, பொருளாதாரம் வீழ்ந்து இருக்கிறது.
நிர்மலா சீதாராமன் எழுதிக் கொடுத்ததை படிப்பார். இங்கே எய்ம்ஸ் மருத்துவமனை போலத்தான், எல்லாவற்றையும் அறிவித்துவிட்டு மட்டும் செல்வார்கள். எதைச் செய்தாலும் அடுத்த தேர்தலை கணக்கில் வைத்துதான் செய்வார்கள். 2024 தேர்தலை முன்னிறுத்தி திட்டங்களை அறிவித்திருக்கலாம், அது செயல்படுகிறதா? என்பதைத் தான் பார்க்க வேண்டும். 8 நிதிநிலை அறிக்கையில் சொன்ன எதையும் செய்யவில்லை என்றார்.