டெல்லி: இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. ஆனால், தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்த கொலீஜியம், அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தலைமையிலான கொலீஜியத்தின் 6 உறுப்பினர்களும் ஒருமனதாக நீதிபதி பிண்டலின் பெயரைப் பரிந்துரைத்த நிலையில், நீதிபதி கே.எம். ஜோசப் மட்டும், நீதிபதி அரவிந்த குமாருக்கு பிற்காலத்தில் பரிசீலிக்க கூறியதாக நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே வேளையில், “அலகாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் நியமனம் தொடர்பாக கொலீஜியத்தின் தீர்மானம் ஒருமனதாக இருந்தது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் அரவிந்த் குமாரின் நியமனத்தை பிற்காலத்தில் பரிசீலிக்கலாம் என்ற அடிப்படையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நீதிபதி கே.எம்.ஜோசப்,” என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீதிபதி ஜோசப் தவிர, கொலீஜியத்தில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எம்.ஆர். ஷா, அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கொலிஜியம் டிசம்பர் 13 அன்று ஐந்து நீதிபதிகளை பரிந்துரைத்தது. மேலும் சில நீதிபதிகளை மாற்றவும் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அந்த பெயர்களை மத்திய அரசு இன்னும் ஏற்றுக்கொண்டு அறிவிக்கவில்லை, இந்த நிலையில், தற்போது, கொலீஜியம் இந்த 2 நீதிபதிகளையும் “உச்சநீதிமன்றத்திற்கு நியமனம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று தெளிவுபடுத்தி உள்ளது.
“எனவே, டிசம்பர் 13, 2022 அன்று பரிந்துரைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகளின் நியமனங்கள் தனித்தனியாக அறிவிக்க வேண்டும், அதற்கு முன்னதாக இந்த தீர்மானத்தால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும்” என்று கொலீஜியம் கூறியுள்ளது.
செவ்வாய்கிழமை நடைபெற்ற அதன் கூட்டத்தில், கொலீஜியம் உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்யத் தகுதியான உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகளின் பெயர்கள் குறித்து ஆலோசித்ததாகக் கூறியது.