சென்னை: கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும், கடும் நிதிசிக்கல் என்று கூறி வந்தாலும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவுடம் கட்டுவதில் அதிக அக்கறை காட்டியது. இதுமட்டுமின்றி, கலைஞரின் எழுத்தை போற்றும் வகையில், கடலில் பேனா நினைவு சின்னம் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ரூ.81 கோடி செலவிடப்படும் எனவும் கூறப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது
மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர் இந்த திட்டத்துக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றைய கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டார். அமேலும் , மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். அதுபோல திமுக ஆதரவாளர்களும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், தலைமையில் திரண்டிருந்தனர்.
கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய சீமான், மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதிக்கு நாங்கள் நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் கடலுக்குள் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மேலும், கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால், அந்த நினைவுச் சின்னத்தை உடைப்பேன் எனவும் அவர் பேசியுள்ளார்.
“கடலில் பேனாவை வைப்பதாக இருந்தால் வெறுமனே அப்படியே நிறுவ முடியாது. கல் , மணல் போன்ற கலவைகளை கொட்ட வேண்டும். அதனால் கடல்வளம், பவளப்பாறை கள் பாதிக்கப்படும். உங்களுக்கு எதைப்பற்றி அக்கறை உள்ளது. கடலில் அடக்கம் செய்யவிட்டதே தவறு. இதில் பேனா வைக்க எப்படி வைக்க அனுமதிக்க முடியும்.
பள்ளிக் கூடம் கட்ட காசு இல்லை. ஆனால் பேனா வைக்க எங்கிருந்து காசு வந்தது. நீங்கள் பேனாவை வைத்துப் பாருங்கள் நானே வந்து உடைப்பேன். கடலில் பேனா வைத்தால் 13 மீனவ பகுதிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது” எனப் பேசினார். சீமானின் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டம் தொடங்கியதும் முதலாவதாக திருவல்லிக்கேணியை சேர்ந்த கல்யாணராமன் பேசினார். அவர் பேசுகையில், “பேனா நினைவு சின்னம் அமைப்பது எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக அமையும். கருணாநிதி சமூக மாற்றங்களை கொண்டு வந்தார். கார்கில் நினைவு சின்னம், போர் நினைவு சின்னம் போல வருங்கால சந்ததியினருங்கு இந்த சின்னம் எடுக்காட்டாக இருக்கும் என்றார்.
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த அருள் முருகன் பேசுகையில், “கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். எனவே இதை வேறு இடத்தில் அமைக்க ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
கருணாநிதி நினைவாக அமைக்கப்படவுள்ள பேனா நினைவு சின்னம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும் சலசலப்பு நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பும், ஆதரவுமாக பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர் முதலில் நினைவு மண்டபம் என்று கூறி விட்டு, பிறகு பேனா நினைவு சின்னம் அறிவிப்பை 110 விதியின்கீழ் அறிவித்தார்கள், இதிலேயே முரண்பாடு உள்ளது – ஆம் ஆத்மி கட்சி சார்பில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டினார்.
கடற்கரைக்கும், நினைவு சின்னத்துக்கும் இடையிலான 350 மீட்டர் பாலம் வீணை போன்ற வடிவில் அமைக்கப்படும் என்கிறார்கள். தமிழுக்கு முக்கியத்துவம் என்று சொல்லி விட்டு கர்நாடக இசையை நினைவு படுத்தும் வீணை எதற்கு? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். கலெக்டரும், போலீசாரும் அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது முன் இருக்கையில் இருந்த சிலர் கருத்து தெரிவிப்பது அவரவர் உரிமை என்று வாக்குவாதம் செய்தனர். வாக்கு வாதம் காரணமாக கூட்டம் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.
பின்னர் அனைவரையும் போலீசார் சமாதானப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. அப்போது கலெக்டர் அமிர்தஜோதி, “சுற்றுச் சூழல் தொடர்பாக மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும். அரசியல் பேசகூடாது. கூட்டத்துக்கு ஒத்துழைப்பு தாருங்கள்” என்றார்.
மெரினா கடலில் அமைக்கப்படும் பேனா நினைவு சின்னம் 42 மீட்டர் உயரத்தில் இந்த நினைவு சின்னம் அமைகிறது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து பாலம் வரை 6 மீட்டர் உயரத்தில் நடைபாதை அமைக்கப்படுகிறது. நிலப்பரப்புக்கு மேல் 290 மீட்டரும், கடல் பரப்புக்கு மேல் 360 மீட்டர் நீளமும் கொண்டதாக இந்த பாலம் அமைகிறது. இந்த பாலத்தின் அகலம் 9 மீட்டர் ஆகும். இதில் 2 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலமும் உள்ளது.