நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ 6E 5274 விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானத்தின் அவசரகால கதவை திறந்ததாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 24 ம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த விவராத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறி அந்த பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்க தயாரான நிலையில் அவசர கால வழியை பயணி ஒருவர் திறக்க முயற்சித்த நிலையில் அதனைப் பார்த்த விமானச் சிப்பந்தி உடனடியாக விமானியை தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினார்.
பின்னர் அவசரகால கதவை திறக்கக் கூடாது என்று அவரை எச்சரித்த நிலையில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டது.
இதனையடுத்து விமான நிலைய காவல்நிலைய அதிகாரிகாளுக்கு தகவல் தரப்பட்டதை அடுத்து அந்த பயணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விமானத்தின் அவசர கதவை திறப்பதும் குடித்துவிட்டு அநாகரீகமாக நடந்துகொள்வதும் சமீப நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயணிக்கு வழங்கப்படும் தண்டனை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுவதாகவும் தண்டனை வழங்குவதில் ஒரே நடைமுறை காட்டாமல் பாரபட்சம் பார்க்கப்படுவதே இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று விமான பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தவிர, மன்னிப்பு கடிதம் எழுதுவதில் வல்லவர்களுக்கு தனி நடைமுறை கடைபிடிக்கப்படுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமான பணிப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மூன்று பயணிகள் மீது குற்றம் சுமத்தப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்று கூறப்படுகிறது.