ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்த டிடிவி தினகரன், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக அவரது கட்சி தொண்டர்கள் அனைவரையும் அறிவித்துள்ளார். அதாவது 293 பேர் அடங்கிய தேர்தல் பணிக் குழு அமைத்துள்ளார். அமமுக வேட்பாளர் பிப்ரவரி 3ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் கூறியுள்ளார்.
ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதனால், அங்கு பலமுனை போட்டி ஏற்படுவது உறுதியாகி உள்ளது. அதிமுக தரப்பில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேலு தலைமையில் 293 கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களையும் டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்.
அமமுகவுக்கு அந்த தொகுதியில் உள்ள மொத்த தொண்டர்களின் எண்ணிக்கையே அவ்வளவு இருக்குமா என சந்தேகம் கிளப்பும் நெட்டிசன்கள், அனைவரையும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக அறிவித்து விட்டார் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 29 வயதான இளைஞர் சிவப்பிரசாத் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் நம்பிக்கையுடன் அமமுக போட்டிடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்ற 290-க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிகுழுவில் இடம்பெற்றுள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஆதரவு கேட்கும் கட்சிகளின் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். வரும் 3 ஆம் தேதி அமமுக வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். ஈரோடு கிழக்கில் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரசாரம் மேற்கொள்வோம்.” எனத் தெரிவித்தார்.