சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுஇ, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்ததும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 10.17 லட்சம் பேர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாகச் சேர்த்துள்ளனர். திருத்தங்களை மேற்கொள்வதற்காக 2.15 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 12.32 லட்சம் பேருக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை 2 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழக்கும் நிலையில், இடைத்தேர்தல் நடக்க இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சில மாநிலங்களில் வேறு வடிவில் வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. ஆனால் இனி நாடு முழுவதும் ஒரே சீரான வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் வகையில் அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்கனவே மூன்று விதமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கியூ.ஆர். கோடு, ஹோலோகிராம் போன்ற தொழில்நுட்பங்கள் ஏற்கனவே அதில் இடம்பெற்றுள்ளன.
இப்போது, போலி அட்டைகளை உருவாக்க முடியாதபடி கூடுதலாக 3 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம் இனி அட்டைக்குள்ளேயே பொருத்தப்படும். ‘கோஸ்ட் இமேஜ்’ என்ற புதிய அம்சம் சேர்க்கப்படும். கியூ.ஆர். கோடுடன் மிகச்சிறிய அளவிலான எழுத்து (பூதக்கண்ணாடி மூலமாக மட்டுமே பார்க்க முடியும்) அச்சிடப்படும். இந்த அம்சங்களுடன் நாடு முழுவதும் ஒரே சீரான புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்படுகின்றன.
இதற்கிடையே, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்காக விவரங்களைக் கோரும் பணியும் நடந்து வருகிறது. இதுவரையில் 63.17 சதவீத வாக்காளர்களிடம் இருந்து ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையுடன் (6.20 கோடி) ஒப்பிட்டுப் பார்க்கும்போது 3.91 கோடியாகும்.அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 94.89 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரங்களும், குறைந்தபட்சமாக சென்னையில் 31.45 சதவீத வாக்காளர்களின் விவரங்களும் பெறப்பட்டுள்ளன. முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் ஏற்கனவே விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவற்றின்படி திருத்தங்களை மேற்கொண்டபோது இந்தி எழுத்துகளுக்கு பதிலாக சேர்க்கப்படும் தமிழ் எழுத்துக்கள் அதில் பொருந்தாமல் போய்விட்டன. உதாரணமாக, ‘ஹ’ என்ற எழுத்துக்கு பதிலாக ‘க’ என்று அச்சிடப்பட்டுவிட்டது.இதனால் ஆட்சேபனைகள் வந்தன. எனவே அவற்றை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டோம். இனி அந்த அடையாள அட்டைகளும் அச்சிடப்பட்டு விரைவில் வழங்கப்படும் என்றார்.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளி கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என்றார்.
இதற்கான விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் உள்ளது. அவர்களிடம் படிவம் 12டி பெறலாம் அல்லது அவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வாக்காளர் வீட்டில் வழங்குவார்கள், வாக்காளர்கள் இல்லை எனில், 2-ம் முறை நேரில் வந்து படிவம் வழங்குவார்கள்.
அந்த படிவத்தில் போதிய விபரங்களுடன் பூர்த்தி செய்து, வருகிற 31-ந்தேதி முதல், பிப்ரவரி மாதம் 4-ந்தேதிக்குள் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் வீடுகளுக்கு வந்து பெற்று கொள்வார்கள். அன்று, சம்மந்தப்பட்டவர் இல்லை என்றால், 2-ம் முறை வீட்டுக்கு வந்து படிவத்தை பெற்று கொள்வார்கள்.
மாற்றுத்திறனாளிகள், தங்களது சான்று நகலை வழங்க வேண்டும். கொரோனா தொற்று உள்ளோர், சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தி கொண்டவர், சுகாதார அலுவலரிடம் சான்று பெற்று வழங்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி, சம்மந்தப்பட்ட அனைத்து படிவங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் பூர்த்தி செய்து, 12டி படிவங்களை சரி பார்த்து தபால் வாக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றவர், இதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியும் கண்காணிப்பார் என்றார்.