சென்னை; காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதை பாராட்டிய சென்னை உயர் நீதிமன்றம், ஏப்ரல் 1ந்தேதி முதல் மேலும் 2 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த உத்தரவிட்டு உள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவை குடித்து விட்டு காலி பாட்டில்களை குடிமகன்கள் ரோட்டிலும், காடுகளில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில், காலி மதுபானப்பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என நீதிமன்றம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது.
முதல்கட்டமாக மலைப்பகுதிகளில் இந்த திட்டத்ம அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சோதனை முறையில் மேலும் பல மாவட்டங்களில், காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும்திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.
திரும்பப் பெறும் பாட்டில்களை விற்பனை செய்து ஈட்டும் வருவாய் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், அடுத்தக்கட்டமாக, கோவை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த வேணடும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.