சென்னை: தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆமை பாதுகாப்பு மறுமலர்வு மையம் அமைக்க ரூ. 6.30 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆமைகளின் வாழ்வுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் கடல் ஆமை எந்த கடற்பகுதியில் பிறந்ததோ அதே கடற்பகுதியில்தான் மீண்டும் முட்டையிடும். அதேபோல கடல் ஆமைகளின் ஆண் – பெண் விகிதம், முட்டை அடைகாக்கப்படும் பகுதியின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும். இந்த ஆச்சரியங்களைத் தாண்டி, நம் கடற்பகுதிகளுக்கு வரும் கடல் ஆமைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
கடல்சார் சூழலியல் மிகவும் நல்ல முறையில் செயல்பட, தனது பங்கைச் செலுத்தும் முக்கியமான உயிரினங்களில் ஒன்று ஆமை. சுமார் 10 முதல் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து கடல் ஆமைகள் இந்த உலகில் இருக்கின்றன.
ஆமைகளின் மொத்தம் 356 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குளிர் ரத்தம் கொண்ட விலங்கினங்களில் ஆமையும் ஒன்று. சுற்றி இருக்கும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய அமைப்பைக் கொண்டது ஆமைகள்.
உயிருக்குள்ளே தங்களை வாழ்க்கையைக் கழித்தாலும் ஆமைகள் நீருக்கடியில் முட்டைகளை விடுவதில்லை. கரைக்கு வந்து நிலப்பகுதியிலேயே தனது முட்டைகளை இட்டுச் செல்கின்றன. ஆண்கள் தங்களது உடலில் மேலோடு கீழோடு என இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது.
எலும்புகளால் ஆன இந்த ஓடுகள் ஆமையின் உடலில் பக்கவாட்டு வரை இணைந்துள்ளன. இந்த ஓடுகள் ஆமையின் உடலில் ஒட்டி இருக்கும். சில உயிரினங்கள் தோலை உரித்துக் கொண்டு வெளியே வருவது போல இந்த ஓட்டிலிருந்து ஆமையினால் வெளியே வர முடியாது.
மூச்சு எடுத்துக் கொள்வதற்காக நீரிலிருந்து ஆமைகள் மேலே வருகின்றன. பொதுவாக ஆமைகள் ஒரு மணி நேரம் நீருக்கடியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. சில ஆமைகள் வாழ்நாள் முழுவதும் நிலப் பகுதியிலேயே வாழ்கின்றன. இன்னும் சில இடங்களில் ஆமைகளைச் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.
சில நாடுகளில் ஆமைகளை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தி வருகின்றனர் அதன் காரணமாகவே கடத்தல் செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இதுவே ஆமைகளின் அழிவுக்கு வழி வகுத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு இது குறித்து அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆமை பாதுகாப்பு மறுமலர்வு மையம் சென்னையில் அமைக்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ. 6.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களிடையே ஆமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இதன் மூலம் ஆமைகளுக்குப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.