சென்னை; ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஜிகே வாசனுடன் சந்திப்பு நடத்தினர். இதுகுறித்து கூறிய தமாக தலைவர் ஜிகே வாசன், இரண்டொரு நாளில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
திருமகன் ஈவெரா மறைவின் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடக்கம் எனவும், பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளை களமிறக்கின. அதிமுக சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) சார்பில் யுவராஜா என்பவர் போட்டியிட்டார். அவர் இரட்டை இலை சின்னத்திலேயே களமிறங்கினார். சொற்ப வித்தியாசத்திலேயே அவர் தோல்வியை தழுவினார்.
ஆனால், தற்போதைய அரசியல் களம், அதிமுக மீதான வழக்குகள் அதுபோல தமாகா சின்னம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அதிமுக கூட்டணி கட்சிகள் தங்களது சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், தற்போது இடைத்தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடுமா அல்லது மீண்டும் தமாகா கட்சிக்கு வாய்ப்பளிக்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.
அ.தி.மு.க. நிர்வாகிகள், இன்று த.மா.கா. தலைவர் வாசனை சந்தித்து பேசினர். அ.திமுக சார்ப்பி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பா. வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் சந்தித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட தமாகா இளைஞர் அணி தலைவர் யுவராஜை மீண்டும் போட்டியிட வைக்கலாமா என்பது குறித்தும், சின்னம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. அதுபோல, தேர்தல் செலவு குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள பாஜக தரப்பில் தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பட்டியலை வெளியிட்டுள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்துபோட்டியிடுமோ என்ற ஐயமும் எற்பட்டுள்ளது.
அதிமுகவுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே வாசன், கடந்த முறை அதிமுக கூட்டணியில் நாங்கள் போட்டியிட்டோம்; இம்முறை அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எங்கள் இலக்கு கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பது தான். வெற்றி வியூகத்தை வகுக்கவே அ.திமு.க மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
திமு.க அரசுக்கு எதிர்மறையான வாக்குகள் நாளுக்கு நாள், நொடிக்கு நொடிக்கு அதிகரித்து கொண்டே வருகின்றன. இரண்டொரு நாளில் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம். கூட்டணி தலைவர்களோடு பேசி வேட்பாளரை முடிவு செய்வோம். இடைத்தேர்தல் மட்டுமின்றி தமிழக் அரசியல் நிலவரம் குறித்து பேசினோம் என கூறினார்.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் யுவராஜ், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் சிக்கல் உள்ளதால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நெருக்கடி த.மா.கா.வுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.