சென்னை: பொங்கலுக்கு வெளியிடப்பட்ட  திரைப்படங்களின்  சிறப்பு காட்சிகள், ஆளுநர் மாளிகையில் உளவு பார்த்து உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து,  பிரபல பத்திரிகையாளர்  சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சினிமா வெளியீட்டாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கூடுதல் தலைமைச்செயலாளர் பனிந்திர ரெட்டி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறையில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரிசனின் ஜிஸ்கொயர் கட்டுமான நிறுவனம் குறித்து அதிரடி தகவல்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை கடலூர் சிறையில் வைத்து கொடுமை படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தற்போது ஜாமினில் உள்ள நிலையில், தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் அதிரடி ஊழல் தகவல்களை வெளியிட்டு வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று திடீரென தமிழ்நாடு லஞ்சஒழிப்பு துறை அலுவலகம் வந்த சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாரிலன் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது  புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி ஆகிய மூன்று பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் கூட்டு சதி உள்ளிட்ட குற்றங்களுக்காக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்துள்ளேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே  லஞ்ச ஒழிப்பு இயக்குநர் கந்தசாமியிடம் புகார் அளிப்பதாக சொல்லி இருந்தேன். ஸ்டாலின் மீது புகார் என்பதால் இயக்குநர் கந்தசாமி என்னை சந்திக்க மறுத்துவிட்டார். அதனால், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமதாசிடம் இந்த புகாரை கொடுத்துள்ளேன்.

’’வெளிப்படையாக சொல்கிறேன், இங்கே இருப்பவர்கள் எல்லோரும் தண்ட சம்பளம் வாங்கி கொண்டு உக்கார்ந்து இருக்கிறார்கள்‘ என காட்டமாக விமர்சித்தவர், முதல்வர் ஸ்டாலின் கீழ் உள்துறை வருகிறது. அவரது மகன் நடத்தும் ரெட் ஜெயண்ட் நிறுவனமே ஸ்டாலினின் பினாமி நிறுவனம்தான்.

தன்னுடைய பினாமி நிறுவனத்திற்காக சட்டத்தை வளைத்து அதிகாலை ஒரு மணி முதல் நான்கு மணி வரை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி அளித்து அவரது மகனுக்கு பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்கு ஸ்டாலின் உத்தரவை வழங்கி உள்ளார்.

கடந்த 11ஆம் தேதி அதிகாலை ஒரு மணி முதல் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. 11ஆம் தேதி இரவுதான் சிறப்பு காட்சிகளை வெளியிட அரசாணை வெளியானது. அந்த அரசாணை வெளியிடும் சமயத்தில் 5 காட்சிகள் வெளியிடப்பட்டுவிட்டது.

தமிழகம் முழுவதும் 950க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இதுபோன்ற காட்சிகளை திரையிட அனுமதித்தது என்பது அதிகார துஷ்பிரயோகம். இதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன். இது குறித்து தமிழக அரசு திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்பது முறையான நடவடிக்கை இல்லை. அ

இது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க கூடிய குற்றம் என்பதால் விசாரணை எடுக்க கோரி புகாரளித்துள்ளேன். டுத்ததாக ஆளுநரை சந்தித்து புகாரை அளிக்க உள்ளேன் என்றார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன்.

லஞ்ச ஒழிப்புத்துறை துறை ஆளும் வர்க்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை. இவர்கள் ஆளும் வர்கத்திற்கு துதிபாடுகிறார்கள். வெளிப்படையாக சொல்கிறேன், இங்கே இருப்பவர்கள் எல்லோரும் தண்ட சம்பளம் வாங்கி கொண்டு உக்கார்ந்து இருக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்தை அனுகுவதற்கு முன்பாக புகார் அளித்தீர்களா என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பும், இது ஒரு நடைமுறை. நான் புகாரளித்தேன், இவர்கள் முறையாக விசாரிக்கவில்லை, மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடுவேன்.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரகுபதி மீதே சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி எந்த அதிரடி நடவடிக்கைகளுக்கும் பெயர்போனவர் கிடையாது. அமித்ஷாவை கைது செய்தார் என்பதற்காக இந்த கேள்வியை எழுப்பாதீர்கள். இவர் ஆளும் வர்கத்தினரை பாதுகாக்கும் வேலையை செய்து கொண்டு இருக்கிறார். இவரை நேர்மையானவர் என்று நினைக்காதீர்கள்.

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, 98 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளார் என மத்திய கணக்காயர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 10 மாதம் முன்னதாக புகாரளித்தேன், அதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக அரசு ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை வைத்து அங்கு என்ன நடக்கிறது என்பதை உளவு பார்ப்பதாக ஆளுநருக்கு தகவல் வந்துள்ளது. சமீபத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் இணை இயக்குநர் ஒருவர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டார். அவரிடம் ஆளுநர் வாக்குமூலம் பெற்று உள்ளார்.

உளவுத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ஆளுநர் மாளிகையில் என்ன நடக்கிறது என்பதை உளவு பார்க்க சொல்லி உள்ளார் என்பதன் அடிப்படையில் அந்த வாக்குமூலம் உள்ளது. இந்த அறிக்கையை எடுத்து கொண்டு ஆளுநர் டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி சென்றுள்ள ஆளுநர் தமிழகம் வந்ததும் நேரம் கேட்டு அவரிடம் இந்த புகார்களை அளிப்பேன். ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்ச ஒழிப்பு இயக்குநர் ஸ்டாலின், உதயநிதி, பனீந்திர ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.

இவ்வாறு கூறினார்.

சவுக்கு சங்கரின் அதிரடி குற்றச்சாட்டு, தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவில் திரைப்பட காட்சிகளுக்கு விதிகளை மீறி அனுமதி அளித்ததால், ஒருவர் அநியாயமாக பலியான சோகங்களும் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித், விஜய் திரைப்படங்களுக்கான சிறப்பு காட்சிகள் ரத்து! தமிழக அரசு அறிவிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி…