சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந்தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. அதனால், இதுவரை இணைக்காத மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, அனைத்து தரப்பினருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 2.67 கோடி இணைப்புகள் மூலம் மின் நுகர்வோர் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் பலர் பல மின் இணைப்பு வாங்கி முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறும் திமுக அரசு, அதை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவற்றை ஒழுங்குப்படுத்தி சீரமைப்பதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டது. தற்போது, அதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31ந்தேதி வரை நீட்டித்தள்ளது. மானிய மின்சாரத்தை குறைக்கும் வகையிலான இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. முதலில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பெரும்பாலானவர்கள் தயங்கினார்கள். இதையடுத்து தமிழக அரசு உரிய விளக்கங்கள் அளித்தது அதோடு ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் 2811 மின் அலுவலகங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்மூலம் டிசம்பர் 31-ந்தேதி வரை சுமார் 50 சதவீதம் பேர்தான் இணைத்திருந்தனர். இதையடுத்து, ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் நீட்டிப்பு நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 வாரங்கள் அவகாசம் உள்ளன. நேற்று வரை மின் இணைப்பு எண்ணுடன் 1.96 கோடி பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இன்னும் சுமார் 70 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது. அவர்களையும் பட்டிய லில் கொண்டு வருவதற்காக அவர்களது செல்போன் எண்ணுக்கு மின் வாரிய ஊழியர்கள் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்கள். இதை தவிர மின் நுகர்வோர்களை தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆதார் எண் இணைத்தவர்களில் சிலரது தகவல்கள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பலரும் ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர்.
இதுகுறித்து கூறிய மின் வாரிய மூத்த அதிகாரி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை அலுவலகங்களுக்கு நேரில் வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் வரவில்லை. நுகர்வோரின் தகவல்கள் மையங்களில் உடனுக்குடன் சேர்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்குத் தான் இத்தகைய சிக்கல்கள் உருவாகி உள்ளது.
அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மின் இணைப்பு ஒருவரது பெயரிலும், ஆதார் எண்ணை இணைத்து வருபவர் வேறொரு பெயரிலும் இருக்கும் பட்சத்தில் அதை மின் வாரிய செயலி ஏற்காது. சிலர் தங்களது பெயரை எம்.கே.சாமி என்று முகவரியில் எழுதி இருப்பார்கள். ஆனால் மின் இணைப்பில் அவர்களது பெயர் முத்துக்குமார சாமி என்று இருக்கும். இத்தகைய நுகர்வோர் பெயர் குழப்பம் காரணமாகவும் குளறுபடி ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் தந்தையின் பெயரில் இருக்கும் மின் இணைப்பை மகன் பயன்படுத்தி வருவார். அவரது ஆதார் எண்ணை பெயர் மாற்றம் செய்யாமல் இணைக்கவே இயலாது. இப்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிக்கல் நிலவுகிறது. அவை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.