மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைப்பெற்று வம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்த 11 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதியம் நடைபெற்ற போட்டியில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகபிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த இந்த போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு பிரத்யேக எண் அச்சிடப்பட்ட பனியன்கள் வழங்கப்பட்டு அவர்கள் களமிறங்கி வருகின்றனர். இந்த நிலையில், வீரர்களில் சிலர் தங்களது பனியன்களை மாற்றி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை தகுதிநீக்கம் செய்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 4 சுற்றுகள் முடிந்துள்ள தகுதி பெற்ற 328 காளைகளில் 305 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. இவற்றில் 15 காளைகள் பல்வேறு காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
போட்டியில் காளைகளை அடக்க 195 வீரர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 11 வீரர்கள் காயமடைந்துள்ளனர். 4 வீரர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காளைமாடு முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சிவக்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.