சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று ‘போகி’ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை போன்ற நகர்ப்புறங்களில் சிறுவர்கள் மேளம் அடித்து போகியை கொண்டாடினர்.
மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று ’போகி’ கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு ’போக்கி’ என்று இன்னொரு பெயரும் உண்டு. அதாவது பழையன கழிதலும், புதியன புகுதலும் இந்த நாளில் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்தாக முன்னோர்கள் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகின்றது. வீட்டிற்கு வெள்ளையடித்து, வீட்டில் உள்ள பயன்படுத்தப்படாத பழைய பொருட்களை தீயிட்டு எரிக்கும் போது திருஷ்டியும் அதனுடன் எரிந்துவிடுவதாக ஐதீகம் கூறுகின்றது.
பொங்கல் பண்டிகையின் ஆரம்ப கட்ட விழாவே போகி பண்டிகையில் தான் தொடங்குகிறது. அதாவது பொங்கல் திருநாளை வரவேற்க வீட்டு வாசலில் பூ காப்புக் கட்டி பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தை தொடங்குவார்கள். இதன் நோக்கம் சுத்தம் செய்த வீட்டில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கிடைப்பதற்காகவும், வீட்டிற்குள் கெட்டது நெருங்காமால் இருப்பதற்காக இதனுடன் மாவிலை, ஆவாரம்பூ, வேம்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கட்டப்படும். மேலும் எதிர்மறையான எண்ணங்களையும், குணங்களையும் நீக்கி இந்த நாளில் அனைவரும் புதுமையாக, ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதே இந்நாளின் சிறப்பு. திருஷ்டி என்பது வெளியிலிருந்து மட்டும் வருவதில்லை, நம் எண்ணங்கள் கூட நாம் வசிக்கும் இடத்தை பாதிக்கும். அதனால் தான் நம் தீய எண்ணங்களையும் சேர்த்து எரிக்க சொல்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் பிறக்கும் பொங்கல் தைத் திருநாளை புதியவர்களாகவும், ஆனந்தமாகவும் வரவேற்க வேண்டும் பழையவற்றை மறக்க வேண்டும் என்பதின்நோக்கமாவே போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
போகி பண்டிகையையொட்டி, இன்று தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகள் முன்பு பழையதை எரித்து சாம்பலாக்கி தை மாதத்தை வரவேற்க தயாரானார்கள்.
சென்னை முழுவதும் அதிகாலையிலேயே பழைய பொருட்களை எரித்து பொதுமக்கள் தங்களது விழாவை கொண்டாடினார். சென்னை மாநகராட்சியின் வேண்டுகோளை ஏற்று கடந்த காலங்களைப் போல அல்லாமல், மாசு ஏற்படுவதை தடுக்கு வகையில் பாரம்பரித்தை காக்கும் பொருட்டு, சிறிதாக எரித்து, தங்களது பண்டிகையை கொண்டாடினார்,. அப்போது சிறுவர்கள் மேளம் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.