சென்னை: ஜனவரி 16ஆம் தேதி நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை அளித்து உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் உணவுப்பொருள் வழங்கல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் ரேசன் கடை ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விடுமுறை நாளான 13ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், பொங்கல் மறுநாளான ஜனவரி 16ந்தேதி ரேஷன் கடைகள் இயங்காது என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 13ஆம் தேதி பணி நாளுக்கு பதிலாக ஜனவரி 27ஆம் தேதி மாற்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நிர்வாக காரணங்களுக்காக 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது, ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
முன்னதாக ஜனவரி 13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்கள் 15, 16ம் ( ஞாயிறு மற்றும் திங்கள் ) தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் தற்போது ரேஷன் கடைகள் வரும் 16ஆம் தேதி இயங்காது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.