சென்னை: அதிக வரி வசூலில் நாட்டிலேயே தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்து உள்ளது.
சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் செய்தியளார்களிடம் பேசும்போது, வரி வசூலில் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு 4-வது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.82,000 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், தமிழ்நாட்டில் வருமான வரி வசூல் செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், 2022 – 2023-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.1.8 கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 70% அளவிற்கு, அதாவது ரூ.82,000 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என கூறினார்-
இந்த வரி வசூலில், டிடிஎஸ் மட்டும் 53% அளவிற்கு வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறியவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இலக்கையும் தாண்டி ரூ.1.25 கோடி வரி வசூல் செய்ய தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில், சுமார் ரூ.4,000 கோடி அளவிற்கு டிடிஎஸ் செலுத்தப்பட்டவில்லை எனவும், 124 சோதனைகளின் மூலம் ரூ.245 கோடி வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கிரிப்டோ கரன்சி நிறுவனங்களை கண்காணித்து வரி வசூல் செய்வது சவாலான பணியாக இருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.