சென்னை: வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் விரைவில் சீரமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாகவும், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக, பெரும்பாலான சாலைகள் பள்ளம் மேடுகளாக காணப்படுகிறது. இந்த சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது மழைக்காலமும் முடிவுக்கு வந்துள்ளதால், சாலைகள் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தற்போது அதற்கான ஒப்பந்தங்களும் கோரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தரப்பில், சென்னையில் உள்ள மொத்த சாலைகளில், 387 கிமீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பருவமழையின் காரணமாக சேதமடைந்த நிலையில், அந்த சாலைகளில் ஜல்லிக் கலவை (Wet Mix Macadam), தார்க்கலவை (Hot Mix) மற்றும் குளிர் தார்க்கலவை (Cold Mix) கொண்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போருது பருவமழை முடிவடைந்துள்ளதால், சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீர்செய்யப்படவுள்ளன. இதில் முதற்கட்டமாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 51.75 கி.மீ., நீளமுள்ள 414 உட்புற சாலைகள் 29.71 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 23.99 கி.மீ., நீளமுள்ள 38 பேருந்து சாலைகள் 25.91 கோடி ரூபாய் என மொத்தம் 75.74 கி.மீ., நீளமுள்ள 452 சாலைகள் 55.62 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதைதொடர்ந்து 126.52 கி.மீ., நீளமுள்ள 705 உட்புற சாலைகள் 69.08 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரூ.1020 கோடியில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி 8 ஆயிரம் சாலைகளில் 1,700 நீளத்திற்கு ரூ.1,020 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.