சென்னை:” தொப்புள் கொடியாய் தொடருபவர்கள், பல நாடுகளிலும் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழர்கள் விளங்கி வருகிறார்கள் என இன்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் அயலகத் தமிழர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அயலகத் தமிழர்களுக்கான புதிய நலத் திட்டங்களை அறிவித்து உரையாற்றினார்.
விழாவில் உரையாற்றிய முதல்வர், தமிழை தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் எங்கும் இருக்க முடியாது. கடற்படை கொண்டிருந்த சோழ மன்னர்கள் மேற்கொண்ட பயணங்கள் பண்பாட்டு உறவுகளாக வளர்ந்திருக்கின்றன. உழைப்பால் தன்னை மட்டுமின்றி தனது நாட்டையும் உயர்த்திக் கட்டியவர்கள்தான் தமிழர்கள். 2010ல் அயலக தமிழர்களின் நலன் காத்திட ஒரு துறையை உருவாக்க கலைஞர் முயன்றார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் உள்ள நாடுகளுடன் நல்லுறவை கொண்ட பெருமை தமிழருக்கு உண்டு.
பல நாடுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழர்கள் விளங்கி வருகின்றனர். அயலக தமிழர்களின் ஆற்றலும் ஆராய்ச்சி திறனும் தனிப்பெரும் வரலாறாக உருவாகி வருகிறது. தமிழர்கள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றார்களோ அங்கெல்லாம் செழிக்க செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் தேதி அயலக தமிழர் நாளாக கொண்டாடப்படும் என திமுக அரசு அறிவித்தது. திமுக அரசு அயலக தமிழர்களுக்காக தனி துறையை உருவாக்கி அமைச்சரை நியமித்துள்ளது. கொரோனா காரணமாக 80,000 தமிழர்கள் தமிழகம் வந்தபோது மானியத்துடன் கடன் வசதி வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனில் சிக்கி தவித்த 1890 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 1524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் சொந்த செலவில் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடலும் கண்டங்களும் நம்மை பிரித்திருந்தாலும் தமிழ் இணைக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்த இலங்கைக்கு ரூ.174 கோடி மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பால் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழினத்தை திமுக அரசு தொடர்ந்து காத்திடும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு அமையும்போதெல்லாம் வெளிநாடு வாழ் தமிழர்கள் முன்னேற்றத்துக்கு திட்டங்கள் தீட்டி செயல்படுத்துகிறோம். தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து விரிவான தரவுகள் ஆவணப்படுத்தப்படும். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்களில் ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவுக்காக ஆண்டுக்கு 200 மாணவர்கள் தமிழ்நாடு அழைத்து வரப்படுவர். அயல்நாடுகளில் பணிக்கு சென்று எதிர்பாராத விதமாக உயிரிழந்து விடுவோர் குடும்பத்துக்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அயல்நாடு செல்லும் தமிழர்கள் குறித்து தரவு தளம் உருவாக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.