சென்னை: தமிழநாடு அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட  ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 12வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், இன்றைய போராட்டத்தின்போது, ஏராளமான செவிலியர்கள், தங்களது பணி தொடர்பாக, கொரோனா உடையான பிபிகிட் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உலக நாடுகளை மிரட்டிய கொரோனா இந்தியாவிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த காலக்கட்டத்தில், மருத்துவ உதவிக்காக அப்போதைய அதிமுக அரசு ஒப்பந்த ஊதியம் அடிப்படையில்  பல ஆயிரம்  செவிலியர்களை  பணி நியமனம் செய்து, மக்களை காப்பாற்றியது.  ஆனால், திமுக அரசு பதவி ஏற்ற நிலையில், ஒப்பந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இதையடுத்து, சுமார் 6 ஆயிரம் ஒப்பந்த செவிலியர்களில் பாதி பேருக்கு பணி நிரந்தரம் வழங்கிய தமிழ்நாடு, மீதி பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.  இந்த  ஒப்பந்தம் டிச.31-ம் தேதியுடன் முடிவடைந்ததால், 2,472 பேருக்கு பணி நீட்டிப்பு இல்லை என்ற தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 1-ம் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 12வது நாளாக தொடர்கிறது.  சென்னை உள்பட மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுக்கு அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்பட பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய 12வது நாள் போராட்டத்தில் பல செவிலியர்கள், கொரோனா கால பணியை நினைவுபடுத்தும் வகையில், அதற்கான உடையான பிபிடிகிட் அணிந்து போராடி வருகின்றனர்.  அத்துடன்  செவிலியர்கள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.   கோட்டை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.