சென்னை: திமுக ஆட்சியால்தான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது என சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது பழனி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது.

 திருவிடைமருதூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிசெழியன், நாச்சியார் கோவில் ராமநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ராமநாதசாமி கோவிலில் 3 மாதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதன் பிறகு பேசிய கோவிசெழியன், பழனி முருகன் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் சேகர்பாபு, பழனி கோவிலில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக பத்திரிகை முழுக்க, முழுக்க தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் 108 ஓதுவார்கள் வேத மத்திரங்களை முழங்க உள்ளனர்.  மேலும்,  பழனி முருகன் கோயிலில் நூற்றுக்கும் அதிகமான ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வேத மந்திரங்கள் தமிழில் வாசிக்கப்படுகிறது என்றால் அதற்கும் காரணம் முதலமைச்சர் தான்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது என்று கூறியதுடன்,  இன்றைக்கு குடமுழுக்கு தொடர்பான பத்திரிகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க தமிழிலேயே அச்சடிக்கப்படுகிறது என்றால் அதற்கு முழு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என பாராட்டினார்.

பழநி குடமுழுக்கு விழாவில் தமிழ் மந்திரமும், ஆகம விதிப்படி வேதங்களும் ஓதப்படும். திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது என்றும்,  ஓடாத தேரையெல்லாம் ஓட வைத்துள்ளார். திருவாரூர் தேரை ஓடவைத்த பெருமை தலைவர் கருணாநிதியை சேரும். நமது முதலமைச்சர் திருத்தணியில் 12 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரையும், சமயபுரத்தில் 13 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரையும், ராமநாதபுரம் ராமநாதசாமி கோவிலில் 18 ஆண்டுகள் ஓடாத தேரையும் ஓடவைத்து பெருமை சேர்த்தவர் என்றார்.