சென்னை: சட்டப்பேரவையில் திமுக உறுப்பினரின் கேள்விக்கு முதன்முறையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.
தமிழ்க சட்டப்பேரவையின் 4வது நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. முதல்நாள் கவர்னர் உரையும், 2வது நாள் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று ஆளுநர் உரைமீதான விவாதம் நடைபெற்றது.
இன்று 4வது நாளாக கூட்டம் தொடங்கியதும், வழக்கமான நடைமுறைகளைக் கடந்து கேள்வி நேரம் தொடங்கியது. இதில், திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜ். திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா, அப்படி உள்ளது என்றால் எப்போது அது நடைமுறைக்கு வரும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு புதிய அமைச்சராக பதவி ஏற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதன்முறையாக பதில் கூறினார்.
உலகக்கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் திருப்பூரில் 1500 பேர் அமர்ந்து பார்க்ககூடிய நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறியதுடன், அதன்மூலம் கபடி மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று கூறினார்.