சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளை தமிழகஅரசு இயக்குகிறது. அதன்படி இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் எனப்து உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். அதன்படி 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக வருகிற 17-ந்தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, 94450 14450, 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், 044 24749002, 044 2628445, 044 26281611 எண்களிலும் புகார் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ரெகுலராக செல்லும் பேருந்துகளுடன் இன்று முதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6,183 சிறப்பு பேருந்துகளும் இன்று இயக்கப்படும் என்றும் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1.40 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து நிலைய ஏற்பாடு மற்றும் பேருந்து வழித்தடம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
கோயம்பேடு பேருந்து நிலையம் (CMBT): மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களுர் செல்லும் பேருந்துகள்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம்: ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரெட்ஹில்ஸ் பொன்னேரி கும்முடிப்பூண்டி ஊத்துக்கோட்டை வழியாக செல்லும்.
கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம்: பாண்டிச்சேரி கடலூர் சிதம்பரம் பேருந்துகள் கத்திப்பாரா பாலம் எஸ்.வி.படேல் ரோடு, கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லும்.
தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம்: திண்டிவனம் விக்கிரவாண்டி பண்ருட்டி கும்பகோணம் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.
தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையம்: திண்டிவனம் வழியாக :- திருவண்ணாமலை, போளுர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.
பூந்தமல்லி பேருந்து நிலையம்: வேலூர், ஆரணி, ஆற்காடு திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.
அனைத்து பயணிகளும் மேற்கண்ட ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு, அனைத்து சாலைகளிலும் சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு இயக்க பேருந்து நிலையங்களுக்கு பயணிக்க மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு இணைப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்கிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் , அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் ஆம்னி பேருந்துகள் பின்வரும் வழித்தடங்களில் செல்லும்.
கோயம்பேடு CMBT லிருந்து அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளும் தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூரில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல பூந்தமல்லி சாலை, வெளிவட்டச் சாலை வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்குச் செல்லும்.
வழக்கம் போல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடையும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.
இதேபோல் கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நாசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடைய வேண்டும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.
கிழக்கு கடற்கரை சாலை நோக்கி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திபாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை (OMR, ECR) வழியாக போக்குவரத்து காவல்துறையின் ஒப்புதலுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும்.
ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, பூந்தமல்லி சாலை, CMRL, ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் ஆகிய இடங்களில் ஏறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு அல்லது ஊரப்பாக்கத்திலிருந்து ஏற்றிச் செல்லலாம்.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம் – செங்கல்பட்டு அல்லது ஶ்ரீ பெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து பயணிகளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.