ஈரோடு: மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேராவை கவுரவப்படுத்தும் வகையில்,ஈரோடு கச்சேரி சாலை திருமகன் ஈவெரா சாலை என பெயர் மாற்றம் செய்ய ஈரோடு மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 4ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் அப்பகுதி மக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இவர், ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று மாலை கூட்டப்பட்டது. மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
முதல் நிகழ்வாக, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது பணி குறித்து, மேயர் உரையாற்றினார். அப்போது, எம்எல்ஏ திருமகனின் பணியை பாராட்டியதுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, ஈரோடு கச்சேரி சாலைக்கு, திருமகன் ஈவெரா சாலை என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் உள்பட, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தற்காலிக அடிப்படை யில் சுய உதவிக்குழு பணியாளர்களை கொண்டு துாய்மை பணி மேற்கொள்வது, கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணி, நோய் தடுப்பு பணி மேற்கொள்ள தினக்கூலி, பகுதி நேர பணியாளர்களை நியமிப்பது, நான்கு நுண்ணுயிர் உரக்கூடங்கள் அமைப்பது, மாநகராட்சியில் காலை உணவு பரிமாறுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள, 38 தன்னார்வலர் களுக்கு, மாதம் தலா, 1,500 ரூபாய் கவுரவ ஊதியம் வழங்குதல் உள்பட, 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு மாநகராட்சிக்கு மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலானவற்றில் திமுக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து, மாநகராட்சி மேயராக திமுகவைச்சேர்ந்த நாகரத்தினம் இருக்கிறார். துணை மேயராக செல்வராஜும், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் இருந்து வருகின்றனர்.