சென்னை:  நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் சிறப்பு காட்சிகள் தியேட்டர்களில் போடப்பட்டு வரும் நிலையில், அதை  பார்க்க வந்த இடத்தில் ஆர்வமிகுதியில் சாலையில் சென்ற லாரியின் மீது ஏறி நடனம் ஆடிய சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்ற 19 வயது இளைஞர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இது அஜித் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் கதாநாயகனாக நடித்துள்ள துணிவு படத்தை  ஹெச்.வினோத் இயக்கி உள்ளார். அஜித் ஜோடியாக  மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். அதுபோல நடிகர் விஜய் , ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படமும் நேற்று  வெளியாகின. நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும்,  அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் திரையிடப்பட்டது. அஜித் – விஜய் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடியாக மோதுவதால், இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு திரையரங்குகளில் குவிந்தனர்.

இந்த நிலையில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை சென்னை ரோகினி திரையரங்கில் பார்க்க வந்த ரசிகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி மீது நடனம் ஆடியபடி கீழே குதித்தார். அப்போது, தவிறி சாலையில் விழுந்த அவருக்கு முதுகுத்தண்டில் கடுமையான காயம் ஏற்பட்டது.  இதனால் எழுந்திருக்க முடியாமல் சாலையில் கடந்த அவரை, அவருடன் வந்த அஜித் ரசிகர்கள், உடனடியாக அவர் கே எம் சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் பரத்குமார்  சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது சிந்தாதரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் (19) என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்துக் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு படம் ரிலீசான நிலையில், முன்னதாக சென்னை ரோகிணி தியேட்டரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்ததால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.