சென்னை: கரும்பு கொள்முதலில் முறைகேடு நடைபெற்று வருகிறது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் குற்றச்சாட்டி உள்ளார்.
பொங்கலுக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு, பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பையும் வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த கரும்புகொள்முதலுக்கு மாவட்ட அளவில் குழு அமைத்து கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் கரும்பு கொள்முதலில் முறைகேட நடப்பாக ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கரும்பு கொள்முதலில் முறைகேடு நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பிற்காக கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில், பாதியளவு மட்டுமே வழங்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டு, கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே அரசு வழங்குவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செய லாகும். மாவட்டத்திற்குள்ளேயே கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்போது வண்டி வாடகை என்ற பெயரில் ஒவ்வொரு கரும்பிற்கும் பாதி தொகையினை பறிப்பது எவ்வகையில் நியாயம்?
ஆகவே, தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். கரும்பு ஒன்றிற்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.