சென்னை:  திமுக எம்.பி. கனிமொழி தலைமையில்  பொதுக்கூட்டத்தில், பாதுகாப்புக்கு வந்த  பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த 2 திமுக இளைஞரணி நிர்வாகிகள், கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. ஆனால், அவர்கள்மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கடந்த 1ந்தேதி  சென்னை, விருகம்பாக்கத்தில் திமுக பெண் எம்.பி.யான கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதில், அந்த தொகுதி எம்.எல்ஏவான பிரபாகர் ராஜா (வியாபாரிகள் சங்க தலைவர் விக்கிரமராஜாவின் மகன்) உள்பட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்ட பெண் காவலரிடம்  திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன்  ஆகியோர், பெண் போலீசிடம் பாலியல் சேட்டை செய்து அத்துமீறி உள்ளனர். இதனால், அந்த பெண் போலீஸ் கதறி அழுதுள்ளார். இதையடுத்து அங்குவந்த சக போலீசார், அந்த 2 பேரையும் கைது செய்ய முயன்றபோருது, திமுஎ எம்எல்ஏ பிரபாகர் ராஜா  உள்பட திமுக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்து அவர்களை கைது செய்யாமல் தடுத்தனர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  பெண்களுக்காக குரல் கொடுக்கும் திமுக பெண்கள் அணி செயலாளரான கனிமொழி மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே, திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பெண் போலீசாரிடம் பாலியல் சேட்டை செய்தது, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.  இதற்கு கனிமொழி எந்தவித கண்டனமும் தெரிவிக்காத நிலையில், பெண்கள் அமைப்பினரும், எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் திமுகவையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து வேறு வழியின்றி, திமுக இளைஞர்அணி நிர்வாகிகளான, ஏகாம்பரம், பிரவீனை காவல்துறையினர்  நள்ளிரவில் கைது செய்து  உள்ளனர். பெண் போலீசாரின் புகாரைத் தொடர்ந்து,  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததுடன், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து, ஏகாம்பரம், பிரவீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு  உள்ளது.

இந்த நிலையில், பாலியல் குற்றவாளிகளான திமுக இளைஞர்அணி நிர்வாகிகளான, ஏகாம்பரம், பிரவீன் மீது குண்டர் சட்டம் பாய்ச்ச வேண்டும் என்று சிலரும், பலர், அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

கனிமொழி எம்.பி. கலந்துகொண்ட திமுக பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாரிடம் ‘பாலியல்’ சேட்டை செய்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?