சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சிறந்து பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, அமைச்சர் சிவசங்கர் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, நகரங்களில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கலை சிறப்பாக கொண்டாடுவது வழங்ககம். இதற்காக, தமிழகஅரசு ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் வருகிறது. முன்னதாக 14-ந்தேதி போகிப் பண்டிகையும், 16ந்தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
தை பொங்கல் தினம் அரசு விடுமுறை நாளில் வந்தாலும் ஜனவரி 14-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். அதனால் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், 12ந்தேதி முதலே சிறப்பு பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து நாளை போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்துகிறார். இதில் அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்
ஏற்கனவே வழக்கமாக செல்லும் பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், சிறப்பு பேருந்துகளை எதிர்பார்த்து ஏராளமானோர் காத்திருக்கின்றனர். இதுகுறித்து, நாளை ஆலோசித்து அறிவிக்கப்பட உள்ளது.