சென்னை: 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தனியார் நிலத்தில் பணி செய்கிறார்கள், அவர்கள் முறையாக வேலை செய்யவில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
கிராமமக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாடு முழுவதும் 100நாள் வேலைதிட்டம் அதாவது, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 2005ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை தரப்படுகிறது. கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதும், பலர் முறையாக பணி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்த புகைப்படங்கள், நேரம், இடம் ஆகியவை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறுகையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முறையாக நடைபெறவில்லை. எனவே இந்த வழக்கில் அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலரை சேர்க்க உத்தரவிட்டும் இந்த திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு குறித்தும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.