விருதுநகர்: கடந்த திமுக ஆட்சியின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என கூறி 10ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. கடந்த 2006 – 2011-ம் ஆண்டு வரை அப்போதைய திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரின் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைக்கு தங்கம் தென்னரசு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார். சுமார் 10ஆண்டுகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், தற்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்பதால் தங்களை விடுவிக்க கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் விசாரித்த போது அவர்கள் குற்றம் செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என கூறி இந்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.