டெல்லி: வெப் சீரிஸில் அதிகரிக்கும் ஆபாசங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? பாராளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு, வெப் தொடர்கள் மற்றும் சமூக வலைதளங்களில்  ஆபாசங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோல ஆபாசம் மற்றும் அநாகரிகமான காட்சிகளை தடுக்க மத்தியஅரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என கேள்வி  எழுப்பினார்.

இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்தார். அப்போது,  இணையதளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் சுதந்திரமான பாதுகாப்பான, பொறுப்புள்ள இணையதள பயன்பாட்டை உறுதிப்படுத்துவதுதான் அரசின் கொள்கை. இணையதளத்தைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இணையதள வசதிகளும் அதற்கேற்ப வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஆபாச இணையதளங்களையும், அநாகரிக வக்கிர வலைதளப் பதிவுகளையும் அவர்கள் பார்க்கும் வாய்ப்பும் அதிகமாகி இருக்கிறது. எல்லையற்ற இணையதள பயன்பாடு இந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்குகிறது. இணைய தளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவதும், சமூக வலைதளங்களில் வக்கிர பதிவுகளை பதிவிடுவதும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ம் படி 3ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தகுந்த குற்றங்களாகும்.

ஆனால்,  இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1973ன் படி இத்தகைய குற்றங்களை தடுப்பதும், நடவடிக்கை எடுப்பதும் காவல் துறையின் பொறுப்பாகும். காவல் துறை மாநில அரசின் கீழ் வருவதால் இத்தகைய குற்றங்களை தடுக்கும் கடமை மாநில அரசுகளுக்கே உண்டு. அதே போல ஆபாச இணையதளங்களை தடை செய்யவும், சமூக வலைதளங்களில் அநாகரீக பதிவுகளை போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவும் வகையில் தகவல் தொழில் நுட்ப சட்டம் 2021 அமல்படுத்தப்பட்டது. இதன்படி மற்றவருடைய உடல் அமைப்பை வெளிப்படுத்தும் படங்கள், ஆபாச படங்கள், சிறுவர்களின் மனதை பாதிக்கும் பதிவுகள் போன்றவற்றை இணையதளங்களில் பதிவேற்றுவது குற்றமாகும்.

எந்த ஒரு தனி நபரும் தன் அனுமதியின்றி தன்னுடைய கௌரவத்தை பாதிக்கும் வகையில் ஒரு பதிவை மற்றொரு நபரோ, இணையதளமோ போட்டிருப்பதாக புகார் செய்தால் அந்த புகாரை பெற்ற 24 மணி நேரத்திற்குள் ஆட்சேபனைக்குரிய அந்த பதிவை நீக்க வழிவகை செய்யும் அளவுக்கு குறைதீர்க்கும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 50லட்சம் பதிவு பெற்ற பயனர்களை கொண்ட எந்த ஒரு இணையதள நிர்வாகமும், 24 மணிநேரமும் செயல்படும் குறைதீர்ப்பு மையத்தை உருவாக்கி, அதற்கென பிரத்யேக அதிகாரியை நியமிப்பதும், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர மத்தியஉள்துறை அமைச்சகம், தேசிய இணையதளக் குற்றம் தொடர்பாக புகாராளிக்க http://www.cybercrime.gov.in என்ற போர்டலை உருவாக்கியி இருப்பதுடன் இதற்கென 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசியையும் அறிமுகம் செய்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க இணையதள குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஆபாசப் படங்களை வெளியிடும் இணையதளங்கள் இண்டர்போல் போலீஸ் உதவியுடன் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது. அத்துடன் அத்தகைய இணையதளங்களுக்குள் பயனாளர்கள் நுழைய முடியாத அளவுக்கு நிரந்தர தடை ஏற்படுத்தவும் தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பாகவும் பயனுள்ள வகையிலும் இணையதளத்தை பயன்படுத்துவது பற்றி சிபிஎஸ்இ நிர்வாகத்திலிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டிருக்கிறது. இதன்படி ஆபாச இணைய தளங்களுக்குள் மாணவர்கள் நுழைய முடியாதபடி தொழில்நுட்ப தடைகளை நிரந்தரமாக நிறுவ பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான இணையதள பயன்பாடு மற்றும் இணையதள குற்றதடுப்பு பற்றி பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது. குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவேற்றங்கள் நடந்தால் அதுபற்றி தகவல் பரிமாறவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும், இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகமும், அமெரிக்காவில் உள்ள காணாமல் போன மற்றும் சீரழிவுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான தேசிய மையமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் உடனடியாக சம்பந்தபட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.