சென்னை: மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை அண்ணாநகரில் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.
சென்னையின் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி காரணமாக, இரண்டு வாரம் (14 நாட்கள்) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.
அதன்படி, திருமங்கலம் 100 அடி சாலையையும், அண்ணாநகர் மூன்றாவது நிழற்சாலையையும் இணைக்கும் 6-வது நிழற்சாலையில், துணை மின்நிலையம் அருகே சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் மாநகராட்சி மூலம் நாளை (டிச.1) முதல் 14ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்ட பணிகள் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
கே5 காவல்நிலைய சந்திப்பிலிருந்து திருமங்கலம் 100 அடி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் 6வது நிழற்சாலை, 5வது நிழற்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ‘Z’ பிளாக் 13வது தெரு வழியாக 6வது நிழற்சாலையை அடைந்து 100 அடி சாலையை நோக்கி செல்லவேண்டும்.
திருமங்கலம் 100 அடி சாலையிலிருந்து கே4 காவல்நிலைய சந்திப்பு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் 6வது நிழற்சாலையிலேயே செல்லலாம்.
8ம் தேதி முதல் 14ம் தேதி வரை இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறும் போது திருமங்கலம் 100 அடி சாலையிலிருந்து கே4 காவல்நிலைய சந்திப்பை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் 6வது நிழற்சாலை ‘G’ பிளாக் 14 வது தெரு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ‘Z’ பிளாக் 13வது தெரு வழியாக 6வது நிழற்சாலை அடைந்து கே4 காவல்நிலைய சந்திப்பை அடையவேண்டும்.
கே4 காவல்நிலைய சந்திப்பிலிருந்து திருமங்கலம் 100 அடி சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் 6வது நிழற்சாலையிலேயே செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.