புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது, நெல்லை மாவட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தலைமையில் தர்ணா நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு கோஷ்டி மோதலில் ஏற்பட்டது. இந்த மோதலில், நெல்லை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளான ராபர்ட், ஜோஸ்வா, டேனியல் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறைக்கு ரஞ்சன் குமார்தான் காரணம் என ரூபி மனோகரன் தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, இந்த நிலையில் ரூபி மனோகரனை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இது தொடர்பாக, ரூபி மனோகரன், ரஞ்சன்குமார் ஆகியோருக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியது. ஆனால், ரூபி மனோகரன் விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.