சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் அனுமதியின்றி யானை பயன்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்க விலங்குகள் நல வாரியம் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தில் ராஜூ தயாரிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இந்த படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தெலுங்கில் வரசுடு என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்களும் பொங்கல் பண்டிகையின்போது (மகர சங்ராந்தி) தெலங்கானா மற்றும் ஆந்திராவில் வெளியாவதால், விஜய்யின் படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கிவதில் சிக்கல் உருவானது. இதனால் விஜய் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.வாரிசு படத்தில், அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக விலங்குகள் நல வாரியத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாரிசு’ பட குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. புகாருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து படத்தயாரிப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், விலங்குகள் நல வாரியத்தின் நோட்டீசுக்கு முறையான ஆவணங்களுடன் பதில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்து உள்ளது.