டெல்லி: எதிரி ஏவுகணையை இடைமறித்து தாக்கும் வகையில் டிஆர்டிஓ தயாரித்துள்ள பாலிஸ்டிக் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
இந்திய ராணுவத்தில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையிலான கூடுதல் அம்சங்களுடன் பல்வேறு ஏவுகணைகளை டிஆர்டிஓ தயாரித்து சோதித்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு வகையான ஏவுகணைகளை வெற்றிகரமாக செய்து சாதித்துள்ள நிலையில், தற்போது அக்னி 3 என்ற பெயரிலான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் ஏவு தளத்தில் இருந்து இந்த சோதனை நேற்று நடத்தப்பட்டது. எதிரியை இடைமறித்து தாக்கும் அக்னி 3 பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும், ராக்கெட் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த வெற்றிகரமான சோதனையானது மூலோபாயப் படைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையின் ஒரு பகுதியாகும். முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரம்பினுள் ஏவுகணையானது ஏவப்பட்டது. அனைத்து செயல்பாட்டு அளவுருக்களும் சரிபார்க்கப்பட்டது.” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.