சென்னை: வி.சி.க மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் திருமாவளவன் மணிவிழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விசிக மகளிர்அணி செயலாளர் நற்சோனை திருமாளவன் முன்னிலையிலேயே, கட்சியில் சனாதனம் நிலவுவதாகவும், ஆண் ஆதிக்கம் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது மைக்கை கட்சி நிர்வாகி ஒருவர் ஆப் செய்து அவமரியாதை செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்து மதம், சனாதனம் போன்ற பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான விசிகவும், அதன் தலைவர் திருமா வளவனும், தொடர்ந்து, சனாதனம் குறித்து விமர்சித்து ஆவேசமாக பேசி வருகின்றனர். `சனாதனத்தை வேரறுப்போம்; ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!’ என்று கூறி வருகின்றனர். மேடைக்கு மேடை இதுதான் அவர்களின் பேச்சாக உள்ளது.
இந்த நிலையில், சென்னை தி நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், திருமாவளவன் மணிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு சனாதனத்தை வேரறுப்போம் என்ற தலைப்பில் ஆவேசமாக பேசினார். மேலும், பெண்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து பேசிய விசிக மகளிர் அமைப்பு செயலாளர் நற்சோனை, திருமாவளவன் முன்னிலையிலேயே கட்சியையும், கட்சி நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் சனாதனம் இருக்கிறது என்று அவர் பேசிய கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய விசிக மகளிர் அணி செயலாளர் நற்சோனை, விசிகவிலும் சனாதனம் நிலவுவதாக நேரடியாகவும், திருமாவளவன் முன்னிலையிலேயே குற்றம் சாட்டினார். மேலும், கட்சியின் ஆண் நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன், நற்சோனை பேசிக் கொண்டிருந்த மைக்கை ஆஃப் செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நற்சோனை பேசிக்கொண்டிருக்கும்போதே விசிக நிர்வாகி ஒருவர் மைக்கை ஆஃப் செய்தார்.
இதனால் மேலும் கோபமடைந்த நற்சோனை, மேலும் ஆவேசமாக பேசத்தொடங்கினார். விசிக ஆண் நிர்வாகிகள் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டமுடியுமோ அவ்வளவு கேவலமாக திட்டி இருக்கானுக.. நான் அனைத்தையும் டேப் ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன். அதை எல்லாம் நான் காட்டுகிறேன்.
நமது கட்சியின் ஆண் சமூகம் இன்னமும் திருந்தவில்லை. ஆண் சமூகம் திருந்த வேண்டும் என வலியுறுத்தியவர், நாங்கள் சனாதனத்தை எதிர்க்கிறோம் ஆனால், நமது கட்சிக்குள் (விசிகவுக்குள்) சனாதனம் இன்னும் இருக்கிறது. டாப் டூ பாட்டம் கட்சிக்குள் சனாதனம் இருக்கிறது என கூறினார். அப்போது மேடைக்கு கீழே அமர்ந்திருந்த பல பெண்கள் நற்சோனைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் திருமாளவன் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினார்.
வீடியோ உதவி: நியூஸ் 18
விசிகவில் சனாதனம் நிலவுவதாக கட்சி தலைவர் திருமாவளவன் பேசிய மேடையிலேயே, நேரடியாக குற்றம் சாட்டிய பெண் நிர்வாகி கட்சி மேடையிலேயே மைக்ஆப் செய்யப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் விசிக மீது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
இதுபோன்ற பஞ்சாயத்துக்கள் சமீப காலமாக பாஜகவில் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது, சனாதனம் குறித்து வீராவேசம் பேசும் திருமாவளவன் கட்சியிலும் எழுந்துள்ளது, இதுஇ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டமணியின் நகைச்சுவையைத்தான் நினைவுபடுத்துகிறது. மேடை பேச்சு வெற்று பேச்சு என்பதுதான் விசிகவிலும் உள்ளது என்பதை நற்சோனை பேச்சு பொதுமக்களிடையே அம்பலப்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.