சென்னை: கல்லூரி பேராசிரியர்கள் மாணாக்கர்களுக்கு பாடம் நடத்தும்போத ஓவர் கோட் அணிய வேண்டும் என தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த ஆடைக்கட்டுப்பாடு, மாணாக்கர்களையும், பேராசிரியர்களையும் வேறுபடுத்தி காட்டுவதற்கான முயற்சி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு மதுரை உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், பெண் ஆசிரியர்கள் மீதான் டீன் ஏஜ் மாணவர்களின் ஆபாசமான கருத்துகள் மற்றும் முறையற்ற பார்வையை தடுக்கும் வகையில், பெண் ஆசிரியர்கள் ஓவர்கோட் அணியும் நடைமுறை அந்த பள்ளி தலைமை ஆசிரியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, பெண் ஆசிரியர்கள் நீலநிற ஓவர் கோட்டி அணிந்து மேல்நிலை பள்ளி மாணாக்கர்களுக்கு பாடம் நடத்தினர். இது தொடர்பாக இருவேறு கருத்துக்கள் வெளியாகின.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஓவர் கோட் அணிய வேண்டும் என்று உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு ஓவர் கோட் அணிய வேண்டும் என்று உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.