சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசரணை கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற விசாரணை ஆணைய அறிக்கை கடந்த மே மாதம் 18-ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் ஆணையத்தின் அறிக்கை 4 பகுதிகளாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆட்சியாளர்கள், அதிகாரிகள்மீது சரமாரியாக குற்றம் சாட்டப்பட்டதுடன், 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதுடன், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு தர பரிந்துரை செய்திருந்தது.
இநத் நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் அடிப்படையில் ஏற்கனவே தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.