சென்னை: கோவை கார்வெடிப்பில் உயிரிழந்த முபின், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ள நிலையில், சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலரது வீடுகளில் இன்று என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் வெடிப்பை நடத்திய ஜமேஷா முபின் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், தற்கொலை பயங்கரவாதியாக மாறியிருந்ததும் தெரிய வந்தது. அவனுக்கு உதவிய மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்புடைய பலரது வீடுகளில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் காவல் துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் வசித்து வரும் பகுதிகளான சென்னை மண்ணடி, கொடுங்கையூர், ஏழுகிணறு, முத்தியால் பேட்டை பகுதியில் சிலரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.