சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிகள் விரிவாக்கம் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனமான ஆல்ஸ்டாம் நிறுவனத்துக்கு சென்றுள்ளது. இந்த நிறுவனம், சென்னை மெட்ரோ ரயிலுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 78 பெட்டி களை தயாரிக்க உள்ளது.
பொதுவாக இந்தியாவின் தேவைக்கேற்ப ரயில் பெட்டிகளை சென்னையில் உள்ள ஐசிஎஃப் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. மேலும் தேவைப்படின் தனியார் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, வாங்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயிலுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 78 ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஆல்ஸ்டாம் என்ற தனியார் நிறுவனம் பெற்றிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டுள்ள ஆல்ம்ஸ்டாம் நிறுவனம் ஏற்கனவே 54 கிலோ மீட்டர் வழித்தடத்திற்கு தேவையான 208 மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கி இருக்கிறது . தற்போது, சென்னை பூந்தமல்லி பைபாஸ் மற்றும் லைட் ஹவுஸ் இடையே சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படவிருக்கிறது. இதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் மெட்ரோ நிர்வாகம், குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் 28 மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்க முடிவு செய்திருக்கிறது. இந்த வழிடத்திற்கு தேவையான சுமார் 78 ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
அத்துடன் நவீன வசதிகளுடன் தயாரிக்கப்படும் அந்த பெட்டிகளை இயக்குவதற்கு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க, சோதனை முடியும் வரை அப்பணிகளை செய்து கொடுக்கவும் முன்வந்திருக்கிறது. மேலும் புதியதாக தயாரிக்கப்படவிருக்கும் பெட்டிகள் சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.