சென்னை: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமரை முதலமைச்சர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு விமானம் வருகை தந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வருகை தந்தார். திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அப்போது, பிரதமரிடம், பொன்னியின் செல்வன்” தமிழ் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பினை முதல்வர் வழங்கினார். தொடர்ந்து, கவர்னர் ரவி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
மதுரை விமானநிலையத்தில் 50 அழைப்பாளர்களுக்கு மோடியை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்கம்தென்னரசு, மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்கின்றனர். பாஜக தரப்பில் மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி, எச்.ராஜா, முருகானந்தம் ஆகியோர் வரவேற்றனர். அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அணியைச் சேர்ந்த ராஜன்செல்லப்பா, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இவர்களும் வரிசையில் நின்று வரவேற்றனர்.
திண்டுக்கல் வந்த பிரதமர் மோடி, பின்னர் கார் மூலம் காந்தி கிராம பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காரின் கதவை திறந்து நின்றபடி, தொண்டர்களை பார்த்து கையசைத்துக்கொண்டே பிரதமர் மோடி பயணித்தார்.
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு வந்த பிரதமர் மோடியை பல்கலைக்கழக நிர்வாகிகள் சிறப்பு மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி மதுரையில், யாரையும் தனியாக சந்தித்து பேசவில்லை. இதனால் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.