டெல்லி: ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்ற அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற 6 பேரும் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்தவாக அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் 6 பேர் விடுதலை தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் (இபிஎஸ் தரப்பு), நீண்ட நாள் சிறையில் இருந்து தண்டனை பெற்றுவிட்டதால், அவர்கள் விடுதலை என்பது நியாயமான கருத்து என கூறினார். இந்த வழக்கு கோப்புகள் மாறி மாறி கைமாறி சென்ற நிலையில், இபிஎஸ் பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க உதவினார் என்றார். மனிதாபிமான அடிப்படையில் இந்த தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது என கூறினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவிக்கையில், 30 ஆண்டுகள் எந்த தவறும் செய்யாமல் இருண்ட சிறையிலே வாடி, வதங்கிய தூக்கு கயிற்றின் நிழலிலே சித்திரைவதைப்பட்ட 6 பேர் இன்றாவது விடுதலை ஆனார்களே என்ற போது நிம்மதி பெரூமுச்சு விட முடிகிறது. அவர்களுக்கு விமோர்சனம் கிடைத்துள்ளது. ஆனால், இந்த 30 ஆண்டுகள் அவர்களுக்கு திரும்ப கிடைக்கப்போவதில்லை. அவர்கள் பட்ட வேதனை, அவர்கள் பட்ட துன்பம் நீங்கப்போவதில்லை, இருந்தாலும் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன். அவர்களுகு ஒரு பெரிய விமோர்சனம், அவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதி கிடைத்ததிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே இவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, இவர்கள் விடுதலையை எதிர்த்து மனு தாக்கல் செய்தால் எடுபடாது. இந்த 6 பேருக்கும் கிடைத்த விடுதலையை எந்த காரணம் கொண்டும் யாராலும் மாற்ற முடியாது. உச்சநீதிமன்றம் சிந்தித்து தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என்று வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மக்கற்ற மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார். பல கட்டங்களாக இவர்களது விடுதலைக்காக போராடி வந்தோம். மேலும் பலதரப்பினரும் இந்த விடுதலைக்காக போராடினார்கள், அதன் பலனாக இவர்கள் விடுதலையை பார்க்கிறேன். இதற்காக முந்தைய அதிமுக ஆட்சிக்கும், தற்போதைய திமுக ஆட்சிக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். மேலும் விடுதலையான 6 பேரில், 4 பேர் ஈழதமிழர்கள். அவர்கள் 4 பேரையும் அவர்களது உறவினர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அங்கு அனுப்ப வேண்டும் என்றும், அவர்களை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பிவிடவேண்டாம் என்றும் கோரிக்கை வைப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: “ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி யளிக்கிறது. 6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும், என தெரிவித்து உள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: “தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நிலைப்பாட்டிற்கு விரோதமாக பேரறிவாளன் விடுதலை, நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி, உச்ச நீதிமன்றம் விடுதலை செய் துள்ளதை வரவேற்கிறோம். ஏற்கெனவே தந்த தீர்ப்பையொட்டி, உச்சநீதிமன்றம் இதனைத் தந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது – சட்டப் பிழை என்பதற்கான சான்றே இந்தத் தீர்ப்பு! உச்ச நீதிமன்றத்தின் இந்த இரண்டு ‘குட்டு’கள் போன்ற நடவடிக்கைக்குப் பிறகாவது தமிழ்நாடு ஆளுநர், பதவி விலகுவாரா என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்! இனியாவது அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து (161 ஆவது பிரிவின்படி) தவறாமல் ஆளுநர்கள் நடக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “ராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப் போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பேரன்பும்!” இவ்வாறு கூறியுள்ளார்.
தீர்ப்பு குறித்த நளினி தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி பேசியபோது, இந்த தீர்ப்பு மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார். தொடர்ச்சியாக அரசியல் காரணத்திற்காக இவர்கள் விடுதலை மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, அரசியல் அமைப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது மகிழ்ச்சி யளிக்கிறது என கூறினார். ஒரு நபரை விடுவிக்கும்போது, மற்றவர்களுக்கு மாறுபட்ட தீர்ப்பை வழங்க முடியாது என்ற அந்த அடிப்படையில்தான் இவர்களுக்கான தீர்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.