திருவள்ளூர்:  தொடர் மழை காரணமாக, புழல் ஏரிக்கு வரும் நீரில் அளவு அதிகரித்து வருவதால்,  ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால்,  கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத் தில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. நேற்று இரவு முதலே திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்பட பல மாவட்டங்களில்  பரவலாக மலை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தின்  பொன்னேரியில் 7 செ.மீ. மழையும், சோளவரத்தில் 6 செ.மீ. மழையும், செங்கல்பட்டில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

புழல் ஏரியானது 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. இதில் இன்று காலை நிலவரப்படி 2,738 கனஅடியாக நீர் இருப்பு உள்ளது. சுமார் 83% புழல் ஏரி நிரம்பியுள்ளது.  கனமழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.  ஏரிக்கு நேற்று 118 கனஅடியாக இருந்த நீர் வரத்தானது இன்று (11-11-2022)காலை 6 மணி நிலவரபரப்படி 558 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.

ஏற்கனவே 10 நாட்களாக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு சுமார் 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக  மழை பெய்து வருவதாகவும், நீர் வரத்து அதிகரித்து உள்ளதாலும், 558 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1000 கனஅடியாக அதிகரித்து;ளளது.

இந்த நிலையில், புழல் ஏரியில் இருந்து பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றம் என்பது 100 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக அதிகரிக்கப்படுவதாக  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 10.30 மணி அளவில் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  உபரிநீர் திறப்பு அதிகரிக்கபட்டுள்ளதால்,  கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.