சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களை திறந்துவிட அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. நீர் நிலைகளின் கொள்ளளவை குறைக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தற்போது, வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி மேலும் தீவிரமடைந்து, வடகடலோ மாவட்டம் வழியாக காரைக்கால் பகுதியில் நாளை கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்ட பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.
சென்னையில், நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. வடசென்னை, ரெட்ஹில்ஸ், பல்லாவரம், பரங்கிமலை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சைதாபேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளூவர்கோட்டம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், ராயப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், ஈசிஆர், ஒஎம்ஆர், சோழிங்கநல்லூர் என நகரின் அனைத்து பகுகளிலும் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையினால் சாலைகள் எங்கும் வெள்ளம் ஓடுகிறது. ஆறுகளாக மாறி காட்சியளிக்கின்றன. வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கின்றன. சிரமப்பட்டு செல்லும் வாகனங்களும் எங்கு பார்த்தாலும் கும்மிருட்டாக மாறி இருப்பதால் இரவில் செல்வது போல் வாகனங்களில் லைட் எரியவிட்டுக் கொண்டு செல்கிறார்கள். குறிப்பாக வடசென்னை, வேளச்சேரி, அண்ணாசாலை அருகே உள்ள ஜிபி ரோடு பகுகிதளில் மழைநிர் தேங்கி உள்ளது. அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக, அலுவலகம் செல்வோரும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளின் கொள்ளளவை குறைக்க மாநகராட்சி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரெட்ரேரி உள்பட சென்னையில் உள்ள குளம் குட்டைகளின் கொள்ளளவை இரண்டு முதல் மூன்று அடி வரை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை அதன் கட்டுபாட்டில் மட்டும் 175 குளம், ஏரிகள் உள்ளன. வில்லிவாக்கம், ரெட்டேரி உள்ளிட்ட சிறிய குளம் முதல் பெரிய ஏரி வரை தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும்போது, மழைநீர் வடிகால் வழியாக குளத்திற்கு வரக்கூடிய தண்ணீரை எளிமையாக உள்வாங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் தெரிவித்து உள்ளார்.