விலாங்கு மீனுக்கு ஆசைப்பவன் வலையில் விரால் மீன் கிடைத்த கதையாக(!) விஜயகாந்துக்கு தூண்டில் போட்டிருக்கும் தி.மு.கவின் வசம்,நடிகர் கார்த்திக் சிக்கியிருக்கிறாராம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட இருக்கிறதாம் கார்த்திக் நடத்தும், “நாடாளும் மக்கள் கட்சி”!
கடந்த 2006–ம் ஆண்டு அரசியலில் குதித்தார் கார்த்திக். அவருக்கு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் ஆனார். 2006 சட்டசபை தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி 111 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. எந்தத் தொகுதியிலும் டெபாசிட் கிடைக்கவில்லை. இதனால் நொந்துபோன கார்த்திக் 2008–ல் நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.
இந்த கட்சி சார்பில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். வாக்குகளும்…ஊஹூம். கடந்த சட்டசபை தேர்தலில் 29 தொகுதிகளில் இவரது கட்சி தனித்து போட்டியிட்டது. அதிலும் பெரிதாக ஓட்டு கிடைக்கவில்லை.
கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார். அந்த கட்சிக்காக தீவிரமாக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். அந்த ரிசல்ட்தான் எல்லோருக்கும் நினைவிருக்குமே!
இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர கார்த்திக் முடிவு செய்திருப்பதாக தகவல் பரவியிருக்கிறது.
இது குறித்து கூறப்படுவதாதவது:
“கார்த்திக்குடன் தி.மு.க. சார்பில் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் இணைய கார்த்திக்கும் சம்மதித்துவிட்டார். தனது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகளை கார்த்திக் கேட்கிறார். தி.மு.க. சார்பில் கார்த்திக்கு மட்டும் ஒரு தொகுதி தருவதாக சொல்லப்படுகிறது. ஆகவே பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது. ஆனால் நிச்சயமாக தி.மு.க. கூட்டணியில் கார்த்திக்கின் கட்சி இடம் பெறும்!”
நாளை மறுநாள் (6ம் தேதி) நெல்லையில் கார்த்திக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படுமாம்!
“ஹூம்.. கார்த்திக் கட்சியோட பேச்சுவார்த்தை.. அதுவும் இழுபறியா..” என்ற ஆதங்கம் தி.மு.க வட்டாரத்தில் கேட்கிறது. அவர்களைச் சொல்லி தப்பில்லை… கட்டுரையின் முதல் வார்த்தையை படியுங்கள்.