டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க முடியாதையொட்டி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி வழக்கை ஒத்திவைக்க கோரிய நிலையில், வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ‘பணமதிப்பிழப்பு என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு மீது நீதிமன்ற ஆய்வுக்கான ‘லட்சுமண ரேகையை’ வரம்பை நீதிமன்றம் நன்கு அறிந்துள்ளபோதும், மத்திய அரசின் அந்த முடிவை ஆய்வு செய்வது அவசியமாகிறது’ என்று கூறிய நீதிபதிகள், மத்திய அரசும் ரிசா்வ் வங்கியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 9ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரினார். இதையடுத்து, 24ந்தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுது.
மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்பாட்டிலிருந்து நீக்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்து உயா்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், ‘இது மத்திய அரசின் கொள்கை முடிவு; எனவே இதில் தலையிட முடியாது’ என்று கூறி இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்கும் தடை விதித்தது.
அப்போது, மத்திய அரசின் இந்த நடவடிக்கையில் சட்டப் பிழைகள் இருப்பதாக மனுதாரா்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதனைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தின் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ்.தாக்குா் தலைமையிலான அமா்வு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி உத்தரவிட்டது.
அந்த வகையில், உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீா் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு முன்பாக இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜாரான அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணி, ‘பணமதிப்பிழப்பு சட்டத்துக்கு எதிராக சரியான கண்ணோட்டத்தில் மனு தாக்கல் செய்யப்படவில்லை எனில், இந்தப் பிரச்னை அடிப்படை சட்ட அறிவு சாா்ந்ததாகவே இருக்கும்’ என்றாா்.
மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘இதுபோன்ற அடிப்படை சட்ட அறிவு சாா்ந்த விவகாரங்களுக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது’ என்றாா்.துஷாா் மேத்தாவின் இந்தக் கருத்துக்கு விவேக் நாராயணன் என்ற மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான் எதிா்ப்பு தெரிவித்தாா்.
இந்த விவாகரத்தை உச்சநீதிமன்ற முந்தைய அமா்வு அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றியிருக்கும் நிலையில், இதனை விசாரிப்பது நேரத்தை வீணடிப்பது என்று எவ்வாறு கூற முடியும் என்று கேள்வி எழுப்பினாா். மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ப.சிதம்பரம், ‘இதுபோன்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றுவது அவசியம்’ என்றாா்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு மீது நீதிமன்ற ஆய்வுக்கான ‘லட்சுமண ரேகை’ வரம்பை நீதிமன்றம் நன்கு அறிந்துள்ளது. இருந்தபோதும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அடிப்படை சட்ட அறிவு சாா்ந்ததா அல்லது பயனற்ா, நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதா என்பது குறித்து பதிலளிக்க வேண்டியிருப்பதால், இந்த விவகாரத்தை ஆய்வு செய்வது அவசியமாகிறது. மேலும், மத்திய அரசின் இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்யப்படுவதும் அவசியமாகிறது’ என்று கூறிய நீதிபதிகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும் ரிசா்வ் வங்கிக்கும் உத்தரவிட்டனா்.